Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 09 ஜூன் ( ஹி.ச.)
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், நெல் கொள்முதல் செய்ததற்கான பணத்தை அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காதில் பூவைச் சுற்றியும், தலையில் முக்காடு போட்டும் நூதன முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
சுமார் ரூ.310 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாகவும், பணம் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதால் அடுத்த பருவ சாகுபடிக்கு தயாராக முடியவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில்,
அறுவடை செய்த நெல்லை அரசிடம் ஒப்படைத்து மாதங்கள் ஆகியும் பணம் கைக்கு வரவில்லை.
வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்தோம். இப்போது கடனை அடைக்க முடியாமலும், அடுத்த பயிருக்கு முதலீடு செய்ய முடியாமலும் தவிக்கிறோம்.
அதிகாரிகளை கேட்டால் ‘வரும், வரும்’ என்று காதில் பூ சுற்றுகிறார்கள். அதனால்தான் நாங்களும் காதில் பூ சுற்றி, வெட்கப்பட்டு முக்காடு போட்டு போராடுகிறோம் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், கொள்முதல் செய்யும் நாளிலிருந்து 48 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்டம் தழுவிய தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் விவசாய சங்க பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b