Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 2 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர்.
அடுத்து 350 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 72 ரன்களும், மார்கோ ஜான்சன் 70 ரன்களும், கார்பின் போஷ் 67 ரன்களும் அடித்தனர்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த சதம் சர்வதேச கிரிக்கெட்டில் பிரமாண்ட மைல்கல்லை எட்டியுள்ளது.
விராட் கோலியின் இந்த சதம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20) அடிக்கப்பட்ட 7 ஆயிரமாவது சதமாக பதிவானது.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சார்லஸ் பேனர்மேன் ஆவார். அவர் 1877-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
தற்போது 7 ஆயிரமாவது சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM