Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 2 டிசம்பர் (ஹி.ச.)
காசியில் உள்ள புண்ணிய நதியாம் கங்கையில் நீராடினால் செய்த பாவம் எல்லாம் தீரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் சரித்திர காலந்தொட்டே நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. இந்த தொடர்பை கொண்டாடும் வகையில் மத்திய அரசால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு காசி தமிழ் சங்கமம் 4.0 இன்று (டிச 02) முதல் தொடங்குகிறது. ஜனவரி 5-ந்தேதி வரை காசியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை பனராஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து நடத்துகின்றன. இந்த விழாவின் முக்கிய கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்' என்பதாகும்.
இந்த நிகழ்ச்சியின் முதற் கட்டமாக இன்று முதல் டிசம்பர் 15 வரை தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்ள இருக்கின்றன.
மேலும் “தமிழ் கற்கலாம்” முயற்சியின் கீழ் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்யவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர்.
இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 15 முதல் 31 வரை நடைபெறும் நிகழ்ச்சியின்போது வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்குப் வருகை தந்து தமிழ் பண்பாடு, கலாச்சாரம், நாகரீக தொடர்பு போன்றவற்றை தெரிந்து கொள்வதுடன் தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் தென்காசியில் இருந்து உத்தரபிரதேசத்தின் காசிக்கு அகத்திய முனிவர் வாகனப் பேரணி இன்று தொடங்கி டிசம்பர் 12 ஆம் தேதி வாரணாசியில் முடிவடையும்.
Hindusthan Samachar / vidya.b