Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச)
இந்திய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.01) துவங்கியது.
வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று (டிச 02) நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பிஹாரைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வாக்குத் திருட்டில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதை வலியுறுத்தும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இண்டியா கூட்டணி எம்பிக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்,
கூறியதாவது,
எஸ்ஐஆர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமை ஆபத்தில் இருப்பதால், இந்த முக்கிய பிரச்சினையில் இருந்து அரசு விலகி ஓடக்கூடாது. பிஹாரில் 62 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது.
எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதால் எழுந்துள்ள கூடுதல் அழுத்தம் காரணமாக ஏராளமான பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும், மக்களவையின் மையப் பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
தொடர் அமளி காரணமாக அவையை பகல் 12 மணி வரை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போதும் அமளி நீடித்ததால் தற்போது மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை காலை 11 மணிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. அப்போது, விதி எண் 267ன் கீழ் 21 நோட்டீஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும் எனினும், அவை நிராகரிக்கப்பட்டதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b