Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 2 டிசம்பர் (ஹி.ச.)
பிஹார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது.
இதில், பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களைக் கைப்பற்றின. தேர்தல் வெற்றியை அடுத்து, கடந்த நவ. 20ம் தேதி நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 26 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 8 பேர், ராஷ்டிரிய லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாகினர்.
இதையடுத்து, பிஹார் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த திங்கள் கிழமை முதன்முறையாகக் கூடியது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர நாராயண் யாதவ் முன்பாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தல் இன்று (டிச 02) நடைபெற்றது.
சபாநாயகர் பதவிக்கு பிரேம் குமார் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக உள்ளார் என தற்காலிக சபாநாயகர் சட்டப்பேரவையில் அறிவித்தார். பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் பிரேம் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்காலிக சபாநாயகர் நரேந்திர நாராயண் யாதவ் இதை அவையில் அறிவித்தார்.
கயா டவுன் தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்ற பிரேம் குமாரை, முதல்வர் நிதிஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b