Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 2 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 200 க்கும் அதிகமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி உசிலம்பட்டி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரும் பொருட்களை ஏற்றி இறக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொங்கபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் சிமெண்ட் மூடைகளை இறக்கி, ஏற்ற உசிலம்பட்டியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பு செய்துவிட்டு வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி மூடைகளை ஏற்றி இறக்கி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் சிமெண்ட் மூடையுடன் வந்த லாரியை மறித்து தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு தனியார் நிறுவனத்தினர் மறுப்பு தெரிவித்த சூழலில், மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை சாலை மறியலை கைவிட வைத்துவிட்டு, தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் இந்த போராட்டம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J