Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்வதற்காக சவாரிக்குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பெரும்பான்மையான குதிரைகள் சரிவர பராமரிக்கப்படாமலும், உரிய இருப்பிட வசதி, தீவனம், சவாரிக்காக பயன்படுத்தப்படும் குடிநீர் அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.
குதிரைகள் மற்றும் கழுதைகளின் உரிமையாளர்கள் அவற்றிற்கு அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தி பதிவு பெற்ற கால்நடை மருத்துவரிடம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குதிரைகளை பகல் 10 மணி முதல் 4 மணி வரை சவாரிக்கு பயன்படுத்தக்கூடாது எனவும், ஒவ்வொரு குதிரைக்கும் தலா 144 சதுர அடி (12அடி நீளம் மற்றும் 12 அடி அகலம்) இடவசதி உள்ள கொட்டில்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கவும், இதற்கென பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது, உரிமம் வழங்கப்படும் போது குதிரைகளுக்கு மைக்ரோசிப் செலுத்துவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
உரிமம் பெறுவதற்காக 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு 28.03.2026 க்குள் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் பெற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
29.03.2026 முதல் உரிமம் பெறாத குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவதை காவல்துறையினரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN