ஒரே தடத்தில் எதிரெதிரே மின்சார ரயில்கள் வருவதாக இணையத்தில் பரவும் காட்சி தவறானது - சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம்
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையில் ஒரே தடத்தில் எதிரெதிரே மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன என்ற தகவலும், அதனை காட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், அந்த தகவல் முற்றிலும் தவறானது என்று சென்ன
MEMU trains


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையில் ஒரே தடத்தில் எதிரெதிரே மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன என்ற தகவலும், அதனை காட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், அந்த தகவல் முற்றிலும் தவறானது என்று சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் காலத்திற்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் தாம்பரம் வரை மற்றும் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவைகளின் வழித்தடங்களில் மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின்படி சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ஐந்தாவது வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்கள் ஆறாவது வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்று பாதை இயக்கம் காரணமாக சேத்துப்பட்டு மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள லூப் லைனை ரயில்கள் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இடைப்பட்ட பகுதியை கடக்க சில நேரங்களில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து வந்து நிற்கும் மின்சார ரயில்கள் ஒரே தடத்தில் எதிரெதிரே வருவது போன்ற தோற்றம் பயணிகளுக்கு ஏற்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், ஒரே தடத்தில் நேருக்கு நேர் ரயில்கள் இயக்கப்படுவது போன்ற எந்த ஆபத்தான சூழலும் இல்லை என்றும் சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை கடக்கும் மின்சார ரயில்களை விரைவு ரயில் பாதையில் இயக்கினால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும் என தினசரி பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனரமைப்பு பணிகள் நடைபெறும் காலத்தில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN