தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம், காந்திஜெயந்தி போன்ற நாட்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் கடந்த அக்.2 காந்தி ஜெயந்தி நாளில் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிராம சபைக
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம், காந்திஜெயந்தி போன்ற நாட்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் கடந்த அக்.2 காந்தி ஜெயந்தி நாளில் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கிராம சபைக்கூட்டம் கரூர் சம்பவத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. அக்கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுளள்து.

இதில் முதன்முதலாக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்கிறார். 2021ல் தி.மு.க., ஆட்சியில் முதல் கூட்டம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் நடந்தது. அதில் முதல்வர் நேரடியாக பங்கேற்றார்.

இம்முறை அவர் காணொலி மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் பொதுமக்களுடன் நேரடியாக பேசுகிறார். மாதந்தோறும் பிரதமர் மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுவது போல முதல்வரும் இக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை அரசின் 'டான்பிட்' (தமிழ்நாடு பைபர் நெட்) நிறுவனம் செய்துள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களில் முதல்வர் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற உள்ள நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b