நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை
புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.) இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் நோக்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பீகாரில் அடுத்த மா
நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை


புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.)

இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் நோக்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில வாக்காளர் பட்டியலில் மேற்படி சிறப்பு திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் இந்த திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்து முடித்தது.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தயாராக இருக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கடைசியாக சிறப்பு திருத்தம் மேற்கொண்டதற்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாராக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பல மாநிலங்களின் மேற்படி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதற்குமான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை பல்வேறு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

எனவே இந்த 5 மாநிலங்கள் மற்றும் மேலும் சில மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் அல்லது அதற்காக தயாராகி வரும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறாது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில் உள்ளாட்சி தேர்தலில் தீவிரம் காட்டி வரும் அந்தந்த மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM