Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்
1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களம் கண்டனர். இதில் ராகுல் 38 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சாய் சுதர்சன் களம் கண்டார்.
சுதர்சன் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இதில் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுப்மன் கில் களம் கண்டார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM