Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.)
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். வருகிற 16-ந் தேதி வரை இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அந்த நாட்டின் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தலீபான் மந்திரி அமீர்கான் முத்தாகி டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக நடந்த நிகழ்வில் ஜெய்சங்கர் பேசியதாவது:-
ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் இரு நாடுகளின் பங்களிப்பும், நெருக்கமான ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கும். அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் போதுமான நிவாரண பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டுவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு எங்களுடன் ஆப்கானிஸ்தான் காட்டிய ஒற்றுமை முக்கியமானது.
ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு விடுத்த அழைப்பு பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். காபூலுக்கும், டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த 2021-ம் ஆண்டில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பின் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM