அதிமுக, தவெக தோற்கடிக்கப்படுவார்கள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
கள்ளக்குறிச்சி, 11 அக்டோபர் (ஹி.ச) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை உயர்த்தி பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் க
Veerapandi


கள்ளக்குறிச்சி, 11 அக்டோபர் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை உயர்த்தி பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராகேஷ் கிஷோரின் ஈனச் செயலினை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருப்பதாகவும், இந்த கூட்டணி அதிமுக, தவெக போன்ற இன்னும் நான்கு கட்சிகளை சேர்த்துக் கொண்டு வந்தாலும் சரி தமிழ்நாட்டில் அது முறியடிக்கப்படும் தோற்கடிக்கப்படும்.

ஏனென்றால் தமிழகம் தான் இந்தியாவிலேயே உலகத்திலேயே ஒரு பொத்திசைவு பூமி, கூட்டுசைவு பூமி மக்களுக்கு இடையேயான பிளவை தமிழ்நாடு எப்பொழுதும் விரும்புவதில்லை அதன் பண்பாடு அப்படித்தான். தமிழ்நாடு எப்போதும் ஒற்றுமையை விரும்பும் என்றும், பிரித்தாலும் சிதைக்கின்ற கருத்தியலை நிராகரிக்கும்.

அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி போன்று இன்னும் 10 எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை போன்று இன்னும் 10 பேர் சேர்ந்து வந்தாலும் சரி அல்லது சகோதரர் அண்ணாமலை போன்று இன்னும் 100 பேர் சேர்ந்து வந்தாலும் சரி, தமிழ் மண்ணில் அவர்களுக்கு சரியான அடி காத்திருக்கிறது என்றும், அவர்களை தோற்கடிப்போம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

தெருக்கள் மற்றும் வீதிகளின் பெயர்களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறித்த கேள்விக்கு,

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை மிகவும் நல்ல செயல் என்றும், தந்தை பெரியார் அதற்காகத்தான் பாடுபட்டார், டாக்டர் அம்பேத்கர் அதற்காகத்தான் பாடுபட்டார், இடதுசாரிகள் அதற்காக தான் பாடுபடுகின்றோம்.

ஏன் காந்தி கூட தீண்டாமைக்கு எதிராகத்தான் பாடுபட்டார், முற்போக்கு எண்ணம் கொண்ட பலரும் அதற்காக பாடுபட்டார்கள், தெருக்கள் மற்றும் வீதிகளில் உள்ள ஜாதி பெயர்கள் மட்டுமல்ல மனித உள்ளங்களில் உள்ள ஜாதிப் பெயர்களும் நீங்க வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை படையில் சட்டப்பேரவை தொகுதிகளை பெறுமா என்ற கேள்விக்கு,

எந்த படையில் தொகுதிகளை பெற்றாலும் வெற்றிப்படையில் நாங்கள் இருப்போம் என்றும், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ஓரிரு இடங்களை கூடுதலாக நாங்கள் கேட்போம் என்றும், அமைப்பு பலத்திற்கு ஏற்றவாறு இன்னும் ஓரிரு இடங்களை கூடுதலாக கேட்போம் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN