Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 11 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழானது முருக பக்தர்கள் கொண்டாடும் பெருவிழா ஆகும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 2710.2025, திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 8.11.2025 இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b