காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது, தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி – சீமான்
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இத
Seeman


Tweet


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்துள்ள கொடுந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவலியையும் தருகின்றது.

மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் தற்பெருமை பேசும் திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்தது உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ சான் பார்மா (Shri Saan Pharma) நிறுவனத்தின் ‘Coldrif’ இருமல் மருந்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவுக்கு அதிகமாக சேர்க்கப் பட்டிருந்ததே 20 இளந்தளிர்களின் இன்னுயிர் பறிக்கப்பட முதன்மைக் காரணம் என்பது தற்போதைய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (Drug Control Department) நடத்திய ஆய்வில், அந்த நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முந்தைய அதிமுக அரசு மற்றும் தற்போதைய திமுக அரசுகளின் அலட்சியத்தால், ஸ்ரீ சான் பார்மா நிறுவனம் மொத்தம் 364 விதிமீறல்களைக் கடந்த 14 ஆண்டுகளில் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடுகளே அடிப்படை காரணமாகும். மருந்தகங்களில் மாதம் 1000 ரூபாயும், மருத்துவமனைகளில் மாதம் 2000 ரூபாயும், இலஞ்சமாக வசூலிக்கும் தமிழ்நாடு மருத்துவத் துறை அதிகாரிகள், இந்நிறுவனங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, மருந்துகளோ இருப்பதில்லை; அதனை சீர்செய்து ஏழை மக்களுக்கு தரமான மருத்துவத்தை திமுக அரசால் இன்றளவும் தர முடியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் திருட்டினை தடுக்க முடியவில்லை; அம்முறைகேடுகளின் உச்சமாக தற்போது ஸ்ரீ சான் பார்மா போன்ற தனியார் மருந்து நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து அவற்றில் நடைபெறும் மோசடிகளையும் கண்டறிந்து தடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 பிஞ்சு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?

சுகாதாரத்துறையில் எந்தக்குறையும் இல்லை என்று மூடி மறைக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்ரமணியன் இப்பெருந்துயரத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்?

தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம் என்று சொன்ன தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ள இத்தலைகுனிவிற்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?

ஆகவே, 20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தினைத் தடைசெய்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்துயரங்கள் நிகழாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்களில் முறையான ஆய்வுகள் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ