Enter your Email Address to subscribe to our newsletters
செங்கல்பட்டு , 12 அக்டோபர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், அப்பகுதி மாணவ மாணவியர் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க, செங்கல்பட்டு அரசு கலைக்கல்லுாரியை மட்டுமே நம்பி இருந்தனர்.
செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக்கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
கல்லுாரிக்கு சொந்தமாக தனி கட்டடம் அமைக்கும் வரை செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு அடுக்குகளுடன் கூடிய 9 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆங்கில வழி கற்றலில் 3 தமிழ் வழி கற்றலில் 2 என மொத்தம் 5 பாடப்பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்து தற்போது 218 மாணவ-மாணவியர் சேர்ந்து, ஜூன் 30ம் தேதி முதல் கல்லுாரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
செய்யூர் அரசு கலைக்கல்லுாரி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்ட நிலையில், செய்யூர்-மேல்மருவத்துார் நெடுஞ்சாலை அருகே உள்ள 7.16 ஏக்கர் இடத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க திட்டமிடப்பட்டு, அரசு நிலத்தை உயர்கல்வி துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் செய்யூர் அரசு கலைக்கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, 18.5 கோடி ரூபாய் கேட்டு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b