Enter your Email Address to subscribe to our newsletters
சேலம், 12 அக்டோபர் (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக் 12) சேலத்தில் உள்ள நங்கவள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அத்த்திக்கடவு அவினாசி திட்டத்தை நாங்கள்தான் கொண்டுவந்தோம். விவசாயிகளுக்கு உதவும் அரசாக அதிமுக இருந்தது. மீண்டும் அடுத்த ஆண்டில் ஆட்சி அமைத்த பிறகும் விவசாயிகளுக்கு எந்தெந்த விஷயத்தில் நன்மைகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம்.
நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் தவெக தொண்டர்கள் விருப்பப்பட்டு வந்து வரவேற்பு கொடுக்கிறார்கள். தலைமையின் ஆணையை பெற்று வரவேண்டும் என்று அவர்களிடம் எங்கள் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள். எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் இதை விமர்சனம் செய்கிறார்கள். அவர்களால் இதைப் பொறுக்க முடியவில்லை.
நாங்கள் எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ, அன்றிலிருந்து இன்றுவரை எங்களைப் பற்றித்தான் விமர்சனம் செய்கிறார்கள் . நாங்கள்: யாரோடு கூட்டணி வைத்தால் இவர்களுக்கு என்ன? திமுக தலைமையில் அவர்கள் கூட்டணி அமைந்திருக்கிறார்கள்.
அந்த கட்சி தலைவர்களுக்கு எங்கள் கூட்டணி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்காவிட்டால் எளிதாக ஜெயிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
தவெக கூட்டணி அமைந்தால் பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என்று தினகரன் கற்பனையாக சொன்னதைப் பற்றியெல்லாம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கலாமா? அவர் ஒரு கட்சியா? எங்கள் கட்சி 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. அதற்கு தகுந்த மாதிரி கேள்வி கேளுங்கள். யார் யாரோ பேசுவது பற்றியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனம் செய்து வருகிறார். தன்னை யாராவது ஆதரிப்பார் என்று அவர் எதிர்பார்த்தார். அவர் நினைத்தது நடக்கவில்லை. அதனால் இதுபோன்ற வார்த்தைகளை கக்கிக்கொண்டு இருக்கிறார்.
தவெக கூட்டணி வருமா என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் தேர்தல் வரும்போதுதான் தெரியும். 2019, 2021, 2024 என்று ஒவ்வொரு தேர்தலையும் பாருங்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணியை அறிவித்துள்ளோம். சில சமயம் தேர்தல் அறிவிப்புக்கு ஒருமாதம் முன்பு கூட்டனி பற்றி பேசி முடிவெடுப்போம். ஏனென்றால் அந்தந்த கட்சிகள் வளர வேண்டும். கூட்டணி என்று அமைத்துவிட்டால் கட்டுப்பாடுகள் வந்துவிடும். எங்கள் கூட்டணியில் சேர இருக்கும் கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக செயல்பட முடியாத சூழல் இருக்கிறது.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் பல பேர் எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு அதிக இடம் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கிறார்கள். அவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்திருக்கிரது.
நாங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டோம்.
சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அன்று இரவே கரூருக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலையில் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவ்வளவுதான்.
பாஜக மாநில தலைவர் இன்று சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.
எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செல்லூர் ராஜு, உதயகுமார்,ராஜன் செல்லப்பா அதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு எடப்படி பழனிசாமி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b