டில்லியில் இருந்து சீனாவுக்கு நவம்பர் 10 முதல் விமான சேவை தொடக்கம்
புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூனில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏ
நவம்பர் 10 முதல் டில்லியில் இருந்து சீனாவுக்கு விமான சேவை தொடக்கம்


புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதே ஆண்டு ஜூனில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது. இதனால் விமான சேவையும் கைவிடப்பட்டது.

கடந்த மாத துவக்கத்தில் சீனாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவர் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவையை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா - சீனா இடையேயான உறவு புத்துயிர் பெற்றது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவங்கும்.

இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் பயன்படுத்தப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து இருந்தது.

தற்போது, இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''நவம்பர் 10ம் தேதி முதல் டில்லியில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும்.''

என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறியதாவது:

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கோல்கட்டாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவையுடன், கூடுதலாக, டில்லி மற்றும் குவாங்சு நகருக்கு இடையே தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படும்.

இது இரு நாடுகளுக்கும் உறவை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை மீண்டும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்.

என்றார்.

டில்லி-குவாங்சு (6E 1701)

டில்லியில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சு நகரை சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், 6E 1702 விமானம் குவாங்சு நகரில் இருந்து தினமும் அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டில்லியை வந்தடையும்.

Hindusthan Samachar / JANAKI RAM