Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 5,500 லாரிகள் மூலமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கியாஸ் வினியோகம் செய்து வருகிறது.
இந்த சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அந்த கூட்டத்தில். 2025-2030-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும், போக்குவரத்து, சுங்க கட்டணங்கள் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலுவை தொகைகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப் குமார் சமந்த்ராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில்,
டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக கியாஸ் நிரப்பும் ஆலைகளின் பணிகள் பாதிக்கப்படும். இந்த போராட்டத்தினால் கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும்.
பொதுமக்களுக்கு சமையல் கியாஸ் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும். சமையல் கியாஸ் என்பது அத்தியாவசிய பொருளாகும். அதை வினியோகம் செய்ய விடாமல் தடுப்பது அத்தியாவசிய பொருள் சட்டத்தின்படி சட்டவிரோதமானது.
எனவே, சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருள் சட்டத்தின்படி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளை இயக்க அதன் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, சமையல் கியாஸ் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
என்று கூறியிருந்தார்.
இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது
Hindusthan Samachar / JANAKI RAM