Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27-ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.செந்தில்குமார், இந்த விவகாரத்தை கோர்ட்டு கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அனைத்தையும் போலீஸ் அனுமதித்துள்ளது.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.விசாரணை நிறைவில், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் யஷ் எஸ்.விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பி.பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல் அமன் மாலிக் சி.பி.ஐ. விசாரணை கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, உடனடியாக சி.பி.ஐ. விசாரணையை தொடங்கக்கோரி, கூட்ட நெரிசலில் பலியான பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசனும், சந்திராவின் கணவர் செல்வராஜ் சார்பில் வக்கீல் ஏ.லட்சுமி நாராயணனும் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா வக்கீல் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. பல்வேறு கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டும் எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், தவெக தொடர்ந்த வழக்கில் நாளை 13 ஆம் தேதி
(திங்கள் கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM