முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.) தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று (அக் 11) வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு பேசி மிரட்டிய நபரை இன்று (அக் 12) கைது செய்துள்ள போலீசார் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று (அக் 11) வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு பேசி மிரட்டிய நபரை இன்று

(அக் 12) கைது செய்துள்ள போலீசார் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று (11.10.2025) மதியம், காவல் கட்டுப்பாட்டறைக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், சென்னை, சித்தரஞ்சன் சாலையிலுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு (SCP) வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழத்தல் பிரிவு (BDDS) காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், காவல் மோப்ப நாய் பிரிவினருடன் ஒருங்கிணைந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கமாண்டோ பிரிவின் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழத்தல் பிரிவு (BDDS) உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் மோப்பா நாயுடன் மேற்கண்ட இடத்தில் தீவிர சோதனைகள் மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.

பின்னர் இது குறித்து E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் தீவிர விசாரணை கொண்டு, வெடிகுண்டு வைத்துள்ளதாக செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த ஐயப்பன், 36, திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம் என்பவரை இன்று (12.10.2025) காலை கைது செய்து விசாரணை செய்து, அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் இளம் வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதும், இவர் சிம் கார்டு விற்பனை செய்து வருவதும், இதே போல் 2020ம் ஆண்டு, சென்னை, கோயம்பேடு பேருந்து முனையம், எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழும்பூர் காவல் நிலைய வழக்கில் சிறைக்கு சென்றதும், 2021ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், இவர் மதுப்பழக்கத்தினால் இவ்வாறு கைபேசி மூலமாக பல்வேறு இடையூறு செய்து வருவதும், அரசு பொது மற்றும் உயர் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட எதிரி மாற்றுத்திறனாளி என்பதாலும் மதுப்பழக்கத்தினால் இவ்வாறு மிரட்டல் விடுத்ததும், அடிக்கடி குடும்பத்தில் சச்சரவு செய்து வருவதும், பள்ளி படிக்கும் 2 பெண் பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது. இனி இது போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகைகளில் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது மனைவியுடன் மனித நேயத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார்மேலும், இவரது செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b