Enter your Email Address to subscribe to our newsletters
திருவாரூர், 12 அக்டோபர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிய பேருந்து நிலையம் ரூ 46.5 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட உள்ளது.
இத்தகைய சூழலில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் அறிவிக்கப்பட்டு ஏலத்தில் பங்குகொள்ள யாரும் முன்வராத நிலையில் திமுகவை சேர்ந்த மன்னார்குடி நகரமன்றத்தலைவர் சோழராஜன் தனது விருப்பத்தின்பேரில் முதற்கட்டமாக 141 கடைகளுக்கு வாடகைதாரர்களை நியமனம் செய்தார்.
இத்தகைய கடைகளுக்கான முன்வைப்பு கட்டணம் நகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி மன்னார்குடி நகராட்சிக்கு சம்மந்தப்பட்ட வாடகைதாரர்களால் செலுத்தப்பட்டுள்ளது. .
இந்நிலையில் தனிச்சையாக வாடகைதாரர்களை நியமனம் செய்த மன்னார்குடி திமுக நகராட்சி நிர்வாகத்தின் ஏதேச்சதிகாரபோக்கை கண்டித்து, செந்தமிழ், சந்தோஷ், மன்னன் உள்ளிட்ட பொதுநல ஆர்வலர்கள் 4 பேர் பேருந்து நிலைய கடைகளை திறப்பதற்கு தடையாணை பிறப்பிக்ககோரி இந்த மாதம் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். கடைகளை திறக்க நீதிமன்றம் தடையாணை வழங்கியது.
ஆனால் பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அங்குள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து முன்பணம் செலுத்தியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி நகராட்சி நிர்வாகம் எந்தவித உத்தரவும் இதுவரை பிறப்பிக்காத நிலையில் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவிவருகிறது.
பேருந்து நிலையத்தில் முன்பணம் செலுத்தி கடையினை வாடகைக்கு எடுத்தவர்கள் திட்டமிட்டபடி கடையினை திறந்தால் நகராட்சி நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் இருந்த அதே இடத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது.
அதே சமயம் மன்னை நகர வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புதிய பேருந்து நிலைய கடை வியாபாரிகளை வாழ்த்தி செல்லுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம் இங்ஙனம் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், மன்னார்குடி என்கிற விளம்பர பிளக்ஸ் பேனர் வைத்திருப்பது பெரும் பரபரப்பையும் எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN