Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 12 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினரும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பிரசார பயணத்தை நடத்தி வருகிறார். தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக் 12) முதல் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மக்களை சந்திக்க உள்ளார்.
பிரசார தொடக்க விழா மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் இன்று மாலையில் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசார பயணம் இன்று தொடங்க உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் பாஜக நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b