Enter your Email Address to subscribe to our newsletters
நாமக்கல், 12 அக்டோபர் (ஹி.ச.)
நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டில் சிறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்புகள் குறைந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாநில அரசு மேற்கொண்டுள்ள அந்நிய முதலீடுகள் இருந்தாலும், உள்நாட்டு தொழில்களை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்ட முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை உள்ளது. ஏற்கனவே கிட்னி திருட்டு சம்பந்தமாக சிறப்பு குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே கடன் தொல்லையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், மோசடியால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகளை பறிகொடுத்துள்ள தொழிலாளர்கள் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர்கள் கடன் தொல்லையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற உறுப்பு விற்பனை என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கந்துவட்டிக் கொடுமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள், கந்துவட்டிக்காரர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். கடன் பெற்றவர்களை சட்டத்திற்கு விரோதமாக துன்புறுத்தக் கூடாது.
இதுதொடர்பான புகார் வந்தால் தண்டிக்கலாம் என்று சட்டம் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தை தொடர்புடைய அலுவலர்கள் கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN