Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் இரு வேறு பெண்களிடம் தொடர்ச்சியாக நகை பறிப்பில் ஈடுபட்டனர்.
புவனேஸ்வரி (30 ) என்ற பெண் குளத்துப்புதூர் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த செயினை அறுத்து சென்றனர்.
மேலும் தொடர்ச்சியாக 11.30 மணி அளவில் குளத்து பாளையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள கே டி கே மில் அருகே முத்துலட்சுமி (35) என்ற பெண் செல்போன் பேசிக் கொண்டு சென்ற பொழுது அதே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து முத்துலட்சுமி கழுத்தில் இருந்த நகையை அறுத்து சென்றனர்.
இரண்டு பெண்களுமே கவரிங் நகைகளை கழுத்தில் அணிந்து இருந்த நிலையில், தங்க நகைகள் என நினைத்து மர்ம நபர்கள் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைத்து போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், கணவன் - மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,நேற்று ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே தனியாக சென்ற வெவ்வேறு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பெண்ணிடம் நகையை பறிப்பில் ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan