Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், திருமணமானவராவார்.
இவருக்கு குழந்தை உள்ளது. சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இரவுப் பணியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கண்ணம்பாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவியுடன் சந்தோஷ் கடந்த ஒரு வருடமாகத் தகாத உறவில் இருந்து வந்தார்.
இது ரவிச்சந்திரனுக்கு தெரிய வந்ததும், சந்தோஷை பலமுறை எச்சரித்தார்.
இருப்பினும் உறவைத் தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தனது நண்பர் நவீன் குமாருடன் சேர்ந்து சந்தோஷைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று இரவு, ரவிச்சந்திரனும் நவீன் குமாரும் சந்தோஷ் பணிபுரிந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதும், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப் பின் இருவரும் தப்பிச் சென்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இருவரும் உள்ளே நுழைந்து சந்தோஷை சரமாரியாகக் குத்தி கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில், சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தோஷின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணைத் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, கொலைக்கு உடந்தையாக இருந்த ரவிச்சந்திரன் மற்றும் நவீன் குமார் ஆகியோர் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்தது.
தற்போது, சரணடைந்தவர்களிடம் சிசிடிவி காட்சிகளின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிகழ்வு சூலூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan