Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 12 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக ஏற்பட்ட தகராறில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க யாசகம் எடுத்த ஒருவர், 5 வாலிபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இயற்கையாக மரணம் அடைந்ததாகக் கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் இது கொலை என்பது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக 5 வாலிபர்களை மானூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மானூர் அருகேயுள்ள ராமையன்பட்டி சிவாஜிநகர் பேருந்து நிறுத்தத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானூர் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் அப்பகுதியில் யாசகம் எடுத்து வந்தவர் என்பதும், உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் எனவும் கருதப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த நபர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலும், அதனால் ஏற்பட்ட காயங்களாலுமே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த அறிக்கை வழக்கின் போக்கையே மாற்றியது. இதையடுத்து, மானூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பொதுமக்களிடம் விசாரணை நடத்தியும் கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
விசாரணையில், இறந்தவர் பேருந்து நிறுத்தத்தில் சிறுநீர் கழித்ததாகவும், அதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள், அவரைத் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த 5 பேரும் சேர்ந்து யாசகம் எடுத்தவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 5 வாலிபர்களையும் மானூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN