Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 12 அக்டோபர் (ஹி.ச.)
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காகவே இந்த வரியை விதித்ததாக அமெரிக்கா கூறியது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதும் தாமதம் ஆகி வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை, சில வார இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டிரம்ப் கையெழுத்திட்ட, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் இருக்கும் போட்டோ அவர் பரிசாக வழங்கினார்.
மேலும், இருநாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,
'இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவரது பதவி காலத்தில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும் என்று நம்புகிறேன்.'
என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல, அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியதாவது,
பிரதமர் மோடியுடன் மிகவும் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அரிய கனிமங்கள் பற்றியும், இரு நாடுகளுக்கும் அது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விவாதித்தோம்.இந்தியாவுடனான உறவை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ் இருநாடுகளுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது.
எனக் கூறினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயல்ர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை செர்ஜியோ கோர் சந்தித்து பேச உள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM