Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது ஊருக்கு செல்ல உள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகள் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு 1400 முதல் 1800 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது குறைந்தபட்சம் 2000 முதல் அதிகபட்சமாக 5000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் 800 முதல் 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது அதிகபட்சமாக 3000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான நாட்களில் 700 முதல் 1100 ரூபாய் வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது அதிகபட்சமாக 4100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமான நாட்களில் 900 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையொட்டி ரூபாய் 4000 அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான நாட்களில் 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
ஆனால் தற்போது அதிகபட்சமாக 3600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டண உயர்வு தொடர்பாக எச்சரித்து ஆய்வு மேற்கொண்டாலும் இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
எனவே தமிழக அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ