Enter your Email Address to subscribe to our newsletters
நாகப்பட்டினம் , 12 அக்டோபர் (ஹி.ச.)
நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவிலானது சிவன் மற்றும் விஷ்ணு தெய்வங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய கோயில்களில் ஒன்றாகும்.
இங்கிருக்கும் சிவனுக்கு சிக்கல் நவநீதேஸ்வரர் என்று திருநாமம். இங்கு நின்ற கோலத்தில் அருளும் அம்மனின் திருநாமம் வேல்நெடுங்கண்ணி. இந்தத் திருத்தலத்தின் தலவிருட்சம் மல்லிகை. சிங்காரவேலர் உத்ஸவமூர்த்தி வடிவில் தனது துணைவியரான வள்ளி, தேவயானையுடன் இங்கே அருள்பாலிக்கிறார்.
ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா இந்தத் தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 21-ந்தேதி (செவ்வாய்) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
இந்த விழாவானது 30-ந் தேதி வரை நடக்கிறது. 22-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 23-ந்தேதி இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும், 25-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
26-ந்தேதி காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 28-ந்தேதி தெய்வசேனை திருக்கல்யாணமும், 29-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் 30-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி, ஆய்வாளர் சதிஷ், கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b