மறைந்த ஒளிப்பதிவாளர் பாபுவிற்கு, இயக்குனர் டி.ராஜேந்தர் இரங்கல்
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.) தமிழ் திரையுலகில் மூத்த ஒளிப்பதிவாளராக இருந்த பாபு மறைவிற்கு இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் திரைப்பட உலகத்தின்
Tr


சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ் திரையுலகில் மூத்த ஒளிப்பதிவாளராக இருந்த பாபு மறைவிற்கு இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ் திரைப்பட உலகத்தின் முத்துச்சர இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஐயா அவர்களுடைய படங்களில் 45 படங்களுக்கு அவரோடு பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தான் பாபு அவர்கள். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. எஸ்.பி.முத்துராமன் அவர்களுடைய முதல் படமான 'கனிமுத்து பாப்பா'வில் தொடங்கி, எனக்குள் ஒருவன் வரை, நான் உனக்குள் ஒருவன், உள்ளத்து துணைவன், உற்ற நண்பன் என அவருக்குத் துணையாய் நின்று, அவரது நிழலாய், விழியாய் , ஒளியாய், ஒளிப்பதிவாய் அத்தனை படங்களில் அவரோடு பணியாற்றியவர். இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவர் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 108. அவர் கண்ணை மூடி மண்ணை விட்டு விண்ணைத் தொட்ட வயது 88. அவர் ஒளிப்பதிவு செய்த படங்கள் பல ஆயின ஹிட்டு. அவர் ஏன் இன்று சென்றுவிட்டார் நம்மை விட்டு. நெஞ்சம் கனக்கிறது. விழிகள் கண்ணீரில் மிதக்கிறது. ஆம், இப்போதுதான் ஒரு ஞாபகம் வருகிறது... நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த 'பாயும் புலி' படத்தில் பொத்துகிட்டு ஊத்துதடி வானம்... என்று ஒரு மழைப்பாட்டு வரும். அந்த மழை பாடலை தமிழகத்தின் வரலாற்றிலேயே, ஏன் ஒளிப்பதிவு வரலாற்றிலேயே முதன்முறையாக அந்த மழைக்காட்சியை டாப் ஆங்கிளில் படம்பிடித்து, படத்தை டாப் வரிசைக்கு எடுத்துச் சென்ற ஒரு டாப்பான ஒளிப்பதிவாளர் தான் நம்முடைய பாபு அவர்கள். 'கனி முத்து பாப்பா' என அத்தனை படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்து தந்திருந்தார் டாப்பா. இன்று அவர் ஏன் தன்னுடைய மூச்சு குழலுக்கு போட்டுக் கொண்டு விட்டார் தாழ்பா. மனம் பொறுக்கவில்லை. நெஞ்சம் தாளவில்லை. சோகத்திலிருந்து மீளவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்தினருக்கும், அவருடைய திரை உலக நண்பர்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ