ரோலக்ஸ் பிடிக்க வந்த மூன்று கும்கி யானைகள் - மதம் பிடித்ததால் முகாமுக்குத் திரும்பிய நரசிம்மன், முத்து மீண்டும் களத்தில் இறங்கிய சின்னத் தம்பி
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளையொட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உ
Three Kumki elephants sent to capture Rolex: Narasimman and Muthu returned to the camp after showing signs of musth, while Chinnathambi has re-entered the field!


கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளையொட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது.

போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளால் பயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'ரோலக்ஸ்' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரோலக்ஸ் யானை பிடிக்கும் பணி ரோலக்ஸ் யானையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த 'ரோலக்ஸ்' காட்டு யானையை இடமாற்றம் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட வனத் துறையினர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர்.

உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததை தொடந்து, அந்த யானையை பிடிப்பதற்கான பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோலக்ஸ் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வெளியேறியது. இதை அடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், யானை அங்கு இருந்து தப்பி வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக நாள்தோறும் இரவு, பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அடுத்த பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள வாழை தோட்டத்தில் ரோலக்ஸ் யானை இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்து உள்ளது. அந்த தகவலின் பேரில் வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், வெண்ணிலா மற்றும் மனோகரன் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்து வந்தனர்.

அப்போது வாழை தோட்டத்தில் இருந்து வெளி வந்த யானைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். அப்போது திடீரென அந்த யானை மருத்துவர் விஜயராகவனை நோக்கி வந்து அவரை தும்பிக்கையால் கீழே தள்ளி தாக்க முயன்றது.

உடனடியாக அங்கு இருந்த பணியாளர்கள் சப்தம் எழுப்பி யானையை விரட்டி மருத்துவரை மீட்டனர்.

தொடர்ந்து வனத்துறை வாகனம் மூலம் அவரை அழைத்து வந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் விஜயராகவனுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. யானை தும்பிக்கையால் தாக்கியதில் விஜயராகவன் முதுகில் லேசான எலும்பு முறிவும், இடது கை விரலில் காயமும் ஏற்பட்டது.

இதை அடுத்து ரோலக்ஸ் கண்காணித்து பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய மூன்று யானைகள் கண்காணித்து வந்தன. அதில் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததால் கடந்த 10 ம் தேதி டாப்சிலிப்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை தற்பொழுது கம்பன் ஊருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் இன்று இரவு முதல் ரோலக்ஸ் என்று அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வனத் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan