Enter your Email Address to subscribe to our newsletters
கொல்கத்தா, 12 அக்டோபர் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் எம்பிபிஎஸ் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில், தொடர்புடையதாக கருதப்படும் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த பாலியல் பலாத்காரம் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி முதல்வர் மம்தா பானர்ஜியின் நிர்வாகத்தையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று
(அக் 12) கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
ஒடிசாவில் கடற்கரையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
அந்த பெண்(பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி) தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவள் எப்படி வெளியே வந்தார்.
எனக்கு தெரிந்தவரையில் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் காட்டுப்பகுதியில் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களின் மாணவர்களை குறிப்பாக பெண்களை கவனித்து கொள்ள வேண்டும். அவர்கள் இரவில் (கல்லூரிக்கு) வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்கள் தங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இங்கு வனப்பகுதி இருக்கிறது. அனைத்து மக்களையும் போலீசார் சோதனை செய்கிறார்கள்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்.
இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நடக்கிறது, அது கண்டிக்கத்தக்கது. மணிப்பூர், உ.பி.பீஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. அங்குள்ள அரசாங்கங்கள் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேற்கு வங்கத்தில் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிடுவோம்.
இவ்வாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b