Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்னும், சுப்மன் கில் 129 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் 31 ரன்களும், டெவின் இம்லாக் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா வரை 270 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.
தொடக்கத்தில் டேகனரின் சந்தர்பால் 10 ரன்களில் வெளியேறினார். அலிக் அதனேஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜான் காம்ப்பெல் , ஷாய் ஹோப் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் எடுத்தது . ஜான் காம்ப்பெல் 87 ரன்களும், ஷாய் ஹோப் 66 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM