Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானிலும் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 1 - 6 வயதுக்கு உட்பட்ட 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதையடுத்து, நடைபெற்ற சோதனையில், குழந்தைகள் குடித்த, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், 'டை எத்திலின் கிளைகால்' என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று (அக் 13) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோடம்பாக்கம் நாகார்ஜூனா 2வது தெருவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் அபார்ட்மென்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தில் இவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை நடத்தாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே, ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, கார்த்திகேயன் வீட்டில் கடந்த ஜூலை 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b