Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு டில்லியின் ஜோதி நகரில் அமைந்துள்ள திகம்பர் ஜெயின் கோவில் கோபுரத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்பட்டு இருந்தது.
நேற்று முன் தினம் அதிகாலையில் கோபுரத்தில் ஏறிய திருடன், கலசத்தை கழற்றி எடுத்துச் சென்றான். இந்தக் காட்சிகள் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளது.
நேற்று முன் தினம் காலையில் கோபுர கலசத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகி நீரஜ் ஜெயின், போலீசில் புகார் செய்தார். எட்டு உலோகங்களைக் கொண்ட இந்தக் கலசத்தில் 200 கிராம் தங்கம் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஜோதி நகர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கண்காணிப்புக் கேமாராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், திருடனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே போல், செப். 3ம் தேதி, செங்கோட்டை வளாகத்தில் நடந்த சமண மத விழாவில், 1.5 கோடி மதிப்புள்ள கலசங்கள் திருடு போயின. விசாரணை நடத்திய போலீசார் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கலசங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தால் டில்லியில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். திருடப்பட்ட கலசம் விரைவில் மீட்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கோவிலின் முன்னாள் தலைவர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில்,
போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கின்றனர்.
'இந்தக் கலசம் எங்களுக்கு மிகவும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. விசாரணையில் ஒவ்வொரு கட்ட தகவலையும் அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிக்கின்றனர். கலசம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM