வருமானம் இல்லாததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் - சுரேஷ் கோபி
திருவனந்தபுரம், 13 அக்டோபர் (ஹி.ச.) மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் 2016ம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெ
வருமானம் இல்லாததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் - சுரேஷ் கோபி


திருவனந்தபுரம், 13 அக்டோபர் (ஹி.ச.)

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் 2016ம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்தார்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கேரளாவில் இருக்கும் ஒரேயொரு நாடாளுமன்ற எம்பி சுரேஷ் கோபி தான்.

இதனால் சுரேஷ் கோபிக்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கினார். சுற்றுலா - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

சுரேஷ் கோபியை எடுத்து கொண்டால் அவருக்கு மத்திய அமைச்சராக செயல்படுவதில் விருப்பம் இல்லை. தொடர்ந்து சினிமாவில் தான் நடிக்க உள்ளதாக அவர் வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும் கேரளாவின் ஒரேயொரு லோக்சபா எம்பி என்பதால் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இப்படியான சூழலில் தான் சுரேஷ் கோபி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுரேஷ் கோபி கூறியதாவது:

நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இதனை மனதார சொல்கிறேன். எனக்கு பதில் கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும்.

இது கேரள அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன். சதானந்தன் மாஸ்டர் மூத்த தலைவராக இருக்கிறார். அவருக்கு பொறுப்பு வழங்குவது என்பது வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் புத்துணர்வை கொடுக்கும். சதானந்தனின் எம்பி அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக மாற வேண்டும். இதற்கு பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் நான் ஒரு போதும் மத்திய அமைச்சராக வேண்டும் என்று விரும்பவில்லை. எனது திரைத்துறை வாழ்க்கையை விட்டு விடவும் விரும்பவில்லை.

என்றார்.

அதே போல் சமீபத்தில் சுரேஷ் கோபி அளித்த பேட்டியில்,

திரைப்படங்களில் நடிக்காததால் தனது வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது என்று கூறியிருந்த நிலையில் தற்போது தனக்கு பதில் கேரளாவை சேர்ந்த பாஜகவின் ராஜ்யசபா எம்பி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் கோபி பரிந்துரைத்துள்ள சதானந்தன் மாஸ்டர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் புகழ்பெற்ற ஆசிரியர் என்பதோடு சமூக செயற்பாட்டாளராக உள்ளார். இதனால் ஜனாதிபதி திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் அவரை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்தார்.

அதன் பிறகு சதானந்தன் மாஸ்டர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று கொண்டார். சதானந்தன் மாஸ்டர், பாஜகவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். கடந்த 2021 கேரளா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முன்னதாக கடந்த 1994ம் ஆண்டு நடந்த வன்முறையில் இரு கால்களையும் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஏற்பட்ட பிரச்சனை வன்முறையான போது அவரது கால்கள் துண்டிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM