Enter your Email Address to subscribe to our newsletters
வாஷிங்டன், 13 அக்டோபர் (ஹி.ச.)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி டிரம்ப் அறிவித்த பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வாஷிங்டன்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தரும் வகையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதனால், இரு தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். எனினும், இதனை கண்காணிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் 200 பேர் காசாவுக்கு செல்வார்கள். தவிரவும், எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகத்தின் வீரர்களும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் நேற்று இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார். அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அப்போது அவர்,
காசா அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள தலைவர்களை ஒன்றிணைப்பதற்காக நான் மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொள்கிறேன். நாங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடைய செய்ய போகிறோம். யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
என்று கூறினார்.
இஸ்ரேல் நாட்டுக்கு சென்று விட்டு அவர் எகிப்து நாட்டுக்கும் செல்ல இருக்கிறார். இது பற்றி குறிப்பிட்ட அவர்,
எகிப்தில் மிக சக்தி வாய்ந்த, பெரிய நாடுகள், பணக்கார நாடுகள் மற்றும் மற்ற அனைவரையும் நாங்கள் சந்திக்க இருக்கிறோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிப்பார்கள்.
என்றும் கூறினார்.
இந்த பயணத்தில், பணய கைதிகளின் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச இருக்கிறார். அது ஒரு சிறப்பான தருணம் என அதனை அவர் குறிப்பிட்டார். இதன்பின்னர், இஸ்ரேலில் அவர் உரையாற்றுகிறார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி டிரம்ப் அறிவித்த பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இஸ்ரேலை தொடர்ந்து எகிப்துக்கு அவர் செல்கிறார். இதில், அந்நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் என்ற சுற்றுலா நகரில் இன்று மதியம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் குறைப்பது உள்ளிட்ட 21 அம்ச திட்டங்களை டிரம்ப் வெளியிடுகிறார்.
Hindusthan Samachar / JANAKI RAM