Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 13 அக்டோபர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
அதன்படி அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர்மின் நிலையங்களில் தினமும் மொத்தம் 839 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உதகை அருகேயுள்ள காட்டுக்குப்பை பகுதியில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் குந்தா நீரேற்று புனல்மின் திட்டத்திற்கான பணிகள் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உடையதாகும். அதனால் ஆண்டுக்கு சுமார் 1095 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதுவரை 60 சதவீத பணிகளே முடிந்துள்ளன. இன்னும் இந்த பணிகள் முடிய ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காட்டுக்குப்பை பகுதியில் நடைபெற்று வரும் நீர் மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் உள்ள நீரை வெளியேற்ற மின்வாரியம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 நாள் எமரால்ட் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பணிகள் தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று எமரால்ட் அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வினாடிக்கு 1000 கன அடி நீர் என 30 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து தண்ணீர் 200 அடி முதல் படிப்படியாக ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN