Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)
ராகுல்காந்தியின் 'வாக்கு திருட்டு முறைகேடு' குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி 2024 மக்களவை தேர்தலின் போது பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் வாக்குத்திருட்டு எப்படி நடைபெற்றது? என்பது குறித்த டிஜிட்டல் விளக்கங்கள் மற்றும் ஆவணங்களை ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோஹித் பாண்டே என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இந்த விவகாரத்தில் தீர்வு வேண்டும் என்றால் விவகாரம் சார்ந்தவர்களிடம் சென்று முறையீடு செய்யலாம்! ஆனால் பொதுநல மனு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை நாட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
அதேநேரத்தில் மனுதாரர் தனது கோரிக்கையை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று முறையீடு செய்ய அனுமதி வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ