Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 13 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அது தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் என தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து நிலையத்தில் உட்புறத்தில் சுற்றிலும் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் நிறுத்தி இருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 127 இரு சக்கர வாகனங்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான நோட்டீசை அந்தந்த இருசக்கர வாகனங்களில் வைத்திருந்தனர்.
அது மட்டும் இன்றி மிகவும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பூட்டு போட்டு பூட்டி வைத்தனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மட்டும் தான் இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்தப்படும் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்குத்தான் இட வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பதால் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் சூழல் தான் ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் இட வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN