Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல், நெரிசலில் சிக்கி பலியான சிறுவனின் தந்தை ஒருவரும் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மஹேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகினர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான அறிக்கையை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (அக் 13) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b