Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் (Decommission) எனக்கோரி 'Save கேரளா பிரிகேட்' எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, வலுவாக உள்ளதாக உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகிய இருந்த மூத்த வழக்கறிஞர் கிரி, இந்த விவகாரத்தை பொருத்தவரை 130 ஆண்டுகள் பழமையான அணை. அதனால் ஏதாவது நேர்ந்தால் ஒரு கோடிக்கும் மேலான மக்களுடைய உயிர் பாதிக்கப்படும் என்றதோடு இதனாலே முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என கோரிக்கையை வைப்பதாக தெரிவித்தார்.
தலைமை நீதிபதி அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான சந்திரன், பழமை வாய்ந்த அணை எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடாக உள்ளது என்பதை நீங்கள் விளக்க வேண்டும் என மனு தாரிடம் கேட்டுக் கொண்டதோடு, புதிய அணை கட்டப்படுமேயானால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் எவ்வாறு கிடைக்கும்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கிரி, புதிய அணை என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியே கட்டப்படும் என்றதோடு, தற்போதைக்கு புதிய அணை கட்டுவதாக திட்டம் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பான மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ