Enter your Email Address to subscribe to our newsletters
கொல்கத்தா, 13 அக்டோபர் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி (23) ஒருவர் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கடந்த அக் 10 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார்.
அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்படி வெளியில் வந்தார். இதற்கு யார் பொறுப்பு?.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும். இந்த நேரத்தில் தனியார் கல்லூரிகள், தங்கள் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ‘இரவு நேர கலாச்சாரத்துக்கு’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, ஒரு முதல்வராக இருந்தும் மம்தா பானர்ஜியின் இந்த கருத்து பெண்மையின் மீது ஒரு கறை. ஆர்.ஜி.கர் மற்றும் சந்தேஷ்காலி சம்பவத்துக்குப் பிறகு, இப்போது இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதிக்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரை அவர் குறை கூறுகிறார், என்றார்.
மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், முன்னதாக, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தபோது, தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு குறைவான இரவு நேர வேலைகளை வழங்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்போது முதல்வர் பெண்கள் இரவில் வெளியே செல்லக்கூடாது என்று கூறுகிறார். அனைத்து பெண்களும் பர்தா அணிந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? என்று வினவினார்.
இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருவதையே இந்த சம்பவம் காட்டுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது சர்ச்சையான நிலையில் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த விவகாரத்தில் ஊடகங்கள் அரசியல் செய்ய் வேணடாம். நான் கூறியதை திட்டமிட்டு திரித்து பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் மலிவான அரசியல் செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b