Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்., முதல் செப்., வரையிலும், அக்., முதல் மார்ச் வரையிலும், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
இதில், அரையாண்டு துவக்கத்தின் முதல் 30 நாட்களில் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம், அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகையை மாநகராட்சி வழங்குகிறது. குறிப்பிட்ட அரையாண்டுக்குள் சொத்து வரி செலுத்தாதோருக்கு வட்டியுடன் கூடிய சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, இந்நிதியாண்டில் முதல் அரையாண்டில், 1,002 கோடி ரூபாயை மாநகராட்சி வசூலித்துள்ளது. அதேபோல், இரண்டாம் அரையாண்டான அக்., 1 முதல் இதுவரை, 180 கோடி ரூபாய் வரை, சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், முறையாக சொத்து வரி செலுத்தாதோரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் கே.மகேஷ் கூறியதாவது,
இரண்டாம் அரையாண்டு துவங்கியுள்ளது. இதில், முதல் அரையாண்டில் முதல் 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தியவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் வாயிலாக தான், 13 நாட்களில், 180 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதோர் என்ற அடிப்படையில், 3.15 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள், 300 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளனர்.
இவர்களில் பலர் முறையாக சொத்து வரி செலுத்தி வரலாம். ஆனால், பழைய வரி கணக்கீட்டில் பிரச்னை இருந்தால், அவர்கள் செலுத்தவில்லை என, தொடர்ச்சியாக கணக்கு காட்டும்.
இவற்றை தவிர்க்கவும், வேறு ஏதேனும் காரணத்திற்காக சொத்து வரியை செலுத்தாமல் உள்ளவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கான பிரச்னைக்கு தீர்வு காண, மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களின் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால், அவர்களிடம் சொத்துவரி வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b