Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
உங்கள் ‘சகாவு’விடம் பாடம் படியுங்கள்: நாடகங்களை நடத்தாமல் சேவை உரிமைச்
சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பொதுமக்கள் கோரும் பொதுச்சேவைகளை 30 நாள்களில் வழங்காவிட்டால், அந்த சேவை வழங்கப்பட்டதாக கருதப்படுவதுடன், சேவையை வழங்கத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட சேவை பெறும் உரிமைச் சட்டம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இதற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட சுமார் 50 சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வது தான் சேவைபெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் ஆகும். கேரளத்தில் இந்த சட்டம் ஏற்கனவே 2012&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அந்தச் சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தவறி விட்டது என்பதால் தான் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய திருத்தப்பட்ட சேவை உரிமைச் சட்டத்தை அம்மாநில அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டம் தெளிவாகவும், விரிவாகவும் உள்ளது.
கேரளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, பொதுமக்கள் கோரும் அனைத்து சேவைகளும் அதிகபட்சம் 30 நாள்களில் வழங்கப்பட வேண்டும்; ஒருவேளை மக்கள் கோரும் சேவையை வழங்க முடியாது என்றால் அதற்கான காரணங்களுடன் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கோரும் சேவையை வழங்க கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தேவை என்றால், அதை வாங்கித் தரும்படி மக்களை தொல்லைப்படுத்தக் கூடாது; மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து அதிகாரிகளே பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெறுவது முதல் சேவை வழங்குவது வரையிலான அனைத்துக் கட்டங்களும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்கப்பட வேண்டும் என்று கேரள சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரும் சேவைகள் குறித்த மனுக்கள் மீது அதிகாரிகள் 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். அதாவது ஒருவர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, சாதி சான்றிதழ் கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிக்கு அபராதமும் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த இ.ஆ.ப. அதிகாரி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மிகவும் சிறப்பான சேவை பெறும் உரிமைச் சட்டம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதேபோன்ற வலிமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 15 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இந்தியாவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டு, அது வலிமையானதாக இல்லை என்று கூறி புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பெயரளவில் கூட சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வியாகும்.
இத்தனைக்கும் 2021&ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மக்களுக்கான சேவைகளை குறித்த காலத்தில் வழங்குவதற்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் கூட, சேவை பெறும் உரிமைச் சட்டத்தைச் கொண்டு வருவதற்காக திமுக அரசு இன்று வரை துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை.
சேவை பெறும் உரிமைச் சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைத்திருக்கும்; அரசு அலுவலகங்களில் கையூட்டு ஒழிந்திருக்கும்; உங்களுடன் ஸ்டாலின் போன்ற ஒன்றுக்கும் உதவாத முகாம்களை நடத்தத் தேவையில்லை. ஆனால், விளம்பரங்களால் மட்டுமே தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, மக்களுக்கு சேவைகள் கிடைப்பது முக்கியமல்ல.... மாறாக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் போன்ற நாடகங்களை நடத்தி விளம்பரம் தேடுவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக இழைக்கும் பெருந்துரோகம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லுறவை வைத்திருக்கிறார். கேரள மேடைகளில் தோன்றி,‘‘என்ட பேரு ஸ்டாலின். என்ட சகாவு பினராயி விஜயன்’’ என்றெல்லாம் முழங்குகிறார். ஆனால், கேரளத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் கொள்முதல் விலை, சேவை பெறும் உரிமைச் சட்டம் போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் வரவில்லை. தமிழக மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சகாவுவிடம் அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இனியாவது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு துரோகத்தைக் கைவிட்டு, இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ