Enter your Email Address to subscribe to our newsletters
சண்டிகர், 14 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த 7-ம் தேதி ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர், ஏடிஜிபியாக இருந்தார்.
புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் மூத்த அதிகாரிகள் சிலர் தனக்கு எதிராக அப்பட்டமாக சாதிப் பாகுபாட்டைக் காட்டுவதாகவும், மன ரீதியாக துன்புறுத்தல்களை அளிப்பதாகவும், அவர்களால் தனக்கு நேர்ந்த அவமானங்களும், அட்டூழியங்களும் தாங்க முடியாதவை போன்ற தற்கொலைக்கான காரணங்களை 8 பக்கங்களுக்கு தட்டச்சு செய்து, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அதில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(அக் 14) சண்டிகரில் உள்ள புரன் குமாரின் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது,
புரன் குமாரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள், அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உறுதியளித்திருந்தார்.
ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது, புரன் குமாரின் குடும்பத்தினருக்கு, அவரது குடும்பத்துக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார் பல ஆண்டுகளாக அமைப்பு ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளார். ஏராளமான அதிகாரிகள் அவரது வாழ்க்கையை அழிக்கவும், அவரை அவமானப்படுத்தவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
இது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன. நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி. இதை நாங்கள் ஏற்கவில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமர் மற்றும் ஹரியானா முதல்வருக்கு எனது நேரடி செய்தி என்னவென்றால், புரன் குமாரின் இரண்டு மகள்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
குற்றமிழைத்த அதிகாரிகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புரன் குமாரின் குடும்பத்தினருக்கு எதிராக ஏற்படுத்தப்படும் அழுத்தத்தைப் போக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b