Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
இந்த எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மார்ச் மாதம் அறிவித்த புதிய டெண்டரில் பங்கேற்ற 3,500 லாரிகளில், 700 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று (அக் 14) 6வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில், சுமார் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொச்சி, மங்களூரு, பாலக்காடு, தூத்துக்குடி, சென்னை, அனந்தபூர், விசாகபட்டணம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, கடந்த 6 நாட்களாக சமையல் எரிவாயு லோடு லாரிகளில் ஏற்றப்படவில்லை.
அதேவேளை, கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், லாரிகளை உடனடியாக இயக்க உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன.
இந்த மனு இன்று (அக் 14) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b