Enter your Email Address to subscribe to our newsletters
காஞ்சிபுரம், 14 அக்டோபர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், செய்யாறு கரையோரத்தில் வசிக்கும் வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், காவாம்பயிர் ஆகிய கிராம மக்கள் வாலாஜாபாத் செல்ல வெங்கச்சேரி மற்றும் திருமுக்கூடல் வழியாக, 15 கி.மீ., துாரத்திற்கு ஆற்றை சுற்றி சென்று வருகின்றனர்.
இதனால், மக்களுக்கு கால விரயமும் பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெய்யாடுபாக்கத்திற்கும் இளையனார் வேலுாருக்கும் இடையே செல்லும் செய்யாறின் மீது, உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ், 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஏழு மாதங்களுக்கு முன் பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. அதில், 300 மீட்டர் அகலத்திற்கும், 7.5 மீட்டர் உயரத்திற்கும் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, கனமழையின் காரணமாக நெய்யாடுபாக்கம் செய்யாறில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நெய்யாடுபாக்கத்திற்கும், இளையனார் வேலுாருக்கும் இடையே உள்ள செய்யாறின் மீது, உயர்மட்ட பாலம் கட்டும் பணி, 30 சதவீதம் முடிந்து உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாலம் கட்டும் பணியை தொடர முடியவில்லை. வெள்ளம் நின்றவுடன் மீண்டும் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b