Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 14 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு,
அன்றாட அரசுப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி மாவட்ட காவல்துறை தரப்பில் தகவல் அளிக்க மறுத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்.
இவர் கடந்த மே மாதம்
2023-ல், திசையன்விளை அருகே உள்ள தனது தோட்டத்தில் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் உள்ளூர் காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மதுரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அ. பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 2021 முதல் 2025 வரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட கொலை மற்றும் சந்தேக மரண வழக்குகள் எத்தனை, ஜெயக்குமார் வழக்கின் தற்போதைய நிலை என்ன, இதுவரை எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா, விசாரணைக் குழுவில் உள்ள அதிகாரிகள் யார், வழக்கு தாமதமாவதற்கான காரணம் என்ன, கொலையின் பின்னணி என்ன என்பது போன்ற 15-க்கும் மேற்பட்ட விரிவான கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு, திருநெல்வேலி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளரும், பொதுத் தகவல் அலுவலருமான எம். சண்முகம் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி.யின் புலன் விசாரணையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர் கோரியுள்ள தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(9)-ன் படி, அன்றாட அரசுப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணமும், விரிவானதாகவும் இருப்பதால் வழங்க இயலாது என்று கூறி, தகவல்களை அளிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மேலும், வழக்கு புலன் விசாரணையில் இருப்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(h)-ன் படியும் தகவல்களை வெளியிட முடியாது எனவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி.யின் இந்த பதில் குறித்து சமூக ஆர்வலர் பிரம்மா கூறுகையில்,
ஒரு மாவட்டத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.
வழக்கின் முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடாதா? நான் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பதில் அளிக்காமல், சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாகத் தகவல்களை மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விசாரணையில் ஏற்பட்டுள்ள மெத்தனப் போக்கை மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு பதில் அளிக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல், என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, ஜெயக்குமாரின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி.யின் இந்த பதில், வழக்கின் மீதான மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN